திங்கள், 5 ஏப்ரல், 2010

வேண்டாம் இனி பூமி வெப்பமயமாதல் : விடை கொடுக்கும் இன்போசிஸ்

பூமி வெப்பமயமாதலை குறைக்கும் உலகளாவிய முயற்சியில் தன் பங்காக பெங்களூரு இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

'உலகில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனம்' என மற்ற நாடுகளால் மதிக்கப்படுவது, இன்போசிஸ் நிறுவனம். கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை உருவாக்கி, உழைப்புக்கு உதாரணமாய் கூறப்படும் நிறுவனம், தற்போது நவீன தொழில்நுட்பங்களால் பூமி சூடாவதைக் கண்டு, அதைக் குறைக்க தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது. அதில் உதயமானது தான், 'கிரீன் இனிஷியேட்டிவ்' என்ற 'பசுமை முனைப்பு' திட்டம்.


இத்திட்டத்தின் தலைவர் ரோஹன் பரேக், எக்ஸ்கியூட்டிவ் திகு ஆறுச்சாமி ஆகியோர் நமது நிருபரிடம் கூறியதாவது:வெப்பமயமாதலுக்கு எங்கள் அலுவலக கட்டடங்களில் உள்ள மின் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், மாசு போன்றவையும் ஒரு காரணம் என நினைக்கிறோம். எங்களது பெங்களூரு அலுவலக கட்டடங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணம். எனவே, வெப்பமயமாதலை தடுக்க, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.எங்கள் நிறுவன தலைவராக நந்தன் நிகலேனி இருந்தபோது, 2008ல் இத்திட்டம் துவக்கப் பட் டது. மைசூருவில் உள்ள எங்கள் கட்டடங்கள் முற்றிலும் 'பசுமை கட்டடங்களாக' வடிவமைக்கப் பட்டது. இப்போது நாட்டின் எந்த பகுதியில் இன்போசிஸ் கட்டடம் உருவாக்கினாலும் அவை வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்படுகிறது.
மின் சேமிப்பு: மின்சாரத்தை சேமிக்க மின் விளக்குகளை 'எல்.இ.டி.,' விளக்குகளை மாற்றுகிறோம். இதனால், மின் சேமிப்பு அதிகரிக்கும். பகல் நேரங்களில் அதிக அளவு சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் நுழையும் விதமாக கட்டடம் கட்டப்படுகிறது. எனவே மின் விளக்கு தேவைப்படாது. போதிய வெளிச்சம் இருந்தால், இயல்பாகவே மின்விளக்கு எரியாத வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதே போல, அறையில் ஆட்கள் இல்லாவிட்டால் தானாகவே அணையும் விளக்குகளை பொருத்துகிறோம்.


தண்ணீர்: வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாகுறையும் ஏற்படுகிறது. இனிமேலும் தண்ணீரை வீணாக்க கூடாது. அனைத்து தண்ணீர் தேவையையும் மழை நீர் சேகரிப்பு மூலம் நிறைவேற்ற உள்ளோம். கழிவு நீரை சுத்திகரித்து, கழிப்பறை, தோட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்துகிறோம். மைசூரு வளாகத்தில் மழை நீரை சேகரிக்க, மூன்று செயற்கை ஏரிகளை உருவாக்கி உள்ளோம். மொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை இந்த ஏரிகள் நிறைவேற்றும். ஐதராபாத் வளாகத்தில் மொத்தம் 19 குளங்களை வெட்ட உள்ளோம். இவற்றில் நான்கு முடிந்துள்ளன. அந்த வளாகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பணிபுரிவர். சென்ற ஆண்டு ஒரு நாள் பெய்த மழையிலேயே நான்கு குளங்களும் நிரம்பி விட்டன.


பசுமை மின்சாரம்: பசுமை மின்சாரம் என்பது, நிலக்கரி, அணுசக்தி போன்றவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படாமல், மாசு ஏற்படுத்தாத நீர் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவது. இதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே சிறு காற்றாலைகளை வைத்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சக்தியை வீணாக்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டும். ஒரு சதவீத மக்களின் மனம் மாறினால் கூட பெரிய சேமிப்பு கிடைக்கும். சக்தியை சேமிப்பதில் நாங்கள் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்கிறோம். இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுடன் பேசுகிறோம்.
கட்டடங்களில் வெப்பத்தை குறைக்க பல தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம். குளிர்ச்சியை ஏற்படுத்துவது என்பதே, 'ஒரு பொருளில் உள்ள வெப்பத்தை வெளியே எடுப்பது தான்'. கட்டட சுவர்களுக்குள் ராக் உல், கிளாஸ் உல், ஸ்டைரோபோம் போன்ற பொருட்களை வைத்து கட்டினால், வெளி வெப்பம் உள்ளே வராது. அறையில் வெப்பம் குறைவாக இருந்தால், 'ஏசி' அதிகம் தேவைப்படாது.ரசாயன பூச்சு உள்ள கண்ணாடிகளை ஜன்னல்களில் பயன்படுத்தினால் சூடு உள்ளே வராது. புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களை இவை தடுத்து விடும். இதனால் வெளிச்சம் மட்டுமே அறைக்குள் ஊடுருவும்.


கட்டட சுவர்களில் நேரடியாக சூரிய கதிர்கள் படுவது போல் கட்டக் கூடாது. கட்டடத்தின் மேலே, பளபளப்பான பூச்சு பூசப்பட்ட தடுப்பு வைக்கிறோம். இதில் பட்டு தெறிக்கும் ஒளி, மேலே சென்று இன்னொரு தடுப்பின் மீது பட்டு, திரும்பும். இப்படியே ஒளியை திருப்பி, அறைகளுக்குள் அனுப்பலாம். இந்த ஒளியில் வெப்பத்திற்குப் பதில் வெளிச்சம் மட்டுமே இருக்கும். இப்படி எல்லாம் கட்டடங்கள் கட்ட ஆரம்பத்தில் சற்று செலவு அதிகமானாலும், பின் சில ஆண்டுகளில் மின்சேமிப்பால் அதிக பலன் கிடைக்கும்.


கம்ப்யூட்டர்கள்: கம்ப் யூட் டர்கள் வெப்பத்தை உமிழுவதை தடுக்க, 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்களின் மானிட்டர்கள் தானாகவே அணைந்து விடும் வகையில், அமைத்துள்ளோம். இதன் மூலமும் மின்சாரம் சேமிக்கப்படும். ஊழியர்களுக்குள் 'ஈகோ கிளப்' (சுற்றுச்சூழல் சங்கம்) ஏற்படுத்தி உள்ளோம். இவர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். பறவைகளை ஈர்ப்பதற்காக எங்கள் வளாகங்களில் இப்போது உள்ளூர் மரக்கன்றுகளைத் தான் நடுகிறோம். மங்களூரு வளாகத்தில், அழிந்து வரும் தாவர இனங்களை காப்பாற்றி வளர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பேட்டரி கார்: மாசுக் கட்டுப் பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களை இவர்கள், வளாகத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. வளாகத்தின் உள்ளே, வாகனங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏராளமான சைக்கிள்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை எடுத்துக்கொண்டு வளாகத்திற்கு உள்ளேயே சுற்றிவிட்டு, எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். புகை மாசை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு. கட்டடம் கட்டும் போது, ஏதாவது மரத்தை அகற்ற வேண்டி வந்தால், அதை வெட்டாமல், வேரோடு அகற்றி, வேறு இடத்தில் மீண்டும் நட்டு, உயிர் கொடுக்கின்றனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.இப்படி சுற்றுச்சூழலை எந்த வழியில் எல்லாம் பாதுகாக்கலாமோ, அத்தனை வழிகளையும் உலகின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் செய்து வருகிறது.


புதிதாக கட்டடங்கள் கட்டும் தொழில் நிறுவனங்கள் இவர்களை பின்பற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடாது. குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிறுவனங்களுக்கும் லாபம்; நாட்டின் எதிர்காலத் திற்கும் நல்லது. வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு இன்போசீஸ் வழிகாட்டுகிறது. எல்லா தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனி மனிதர்களும் விழிப்புணர்வு பெற்றால், 'பசுமை இந்தியா' என்ற நமது கனவு நிறைவேறும்.

வாழ்த்துக்கள் தொடரட்டும் இன்போசீஸ்-ன் சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்த சேவைகள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக