புதன், 21 ஏப்ரல், 2010

நாம் நாமாக இருப்போம்..

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம். பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

நன்றி: ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக