சனி, 6 மார்ச், 2010

கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரியில் படித்து முடித்தவர்கள் தங்களுடைய மாற்று சான்றிதழை (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) தொலைத்துவிட்டாலோ, அல்லது இயற்கை சீற்றங்களின்போது அழிந்துவிட்டாலோ, மாற்று சான்றிதழ் பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
மாற்று சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கல்லூரி முதல்வரே செயல்படுகிறார்.
மாற்று சான்றிதழ் தொலைந்துவிட்டால் அது பற்றி அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பின்னர் சான்றிதழ் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்கு காவல் அதிகாரி ஒரு சான்றிதழ் வழங்குவார். அந்த சான்றிதழை பெற்ற பின் மாற்று சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் (தாசில்தார்)மனு மூலம் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் அந்த பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்துவிட்டது உண்மை என சான்று அளிப்பார்.

பின்னர் காவல் நிலையம் கொடுத்த சான்றிதழ், தாசில்தார் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணம் ஆகியவற்றுடன் கல்லூரி முதல்வருக்கு மாற்று சான்றிதழ் நகல் கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மாற்று சான்றிதழ் வழங்குவார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழை தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழை தொலைத்துவிட்டால் கடைசியாக படித்த கல்லூரி முதல்வருக்கு மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அந்த மதிப்பெண் சான்றிதழ் நம்பர், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றை சரிபார்த்து அவர் வழியாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை எழுதுவார். அத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்குவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக